• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 25, 2023

நற்றிணைப் பாடல் 281:

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர் அன்பிலர்- தோழி! – நம் காதலோரே.

பாடியவர் : கழார்க் கீரன் எயிற்றியார்
திணை : பாலை

பொருள் :

தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடுபலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது ‘கழாஅர்’ என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போகடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்தன மாதலையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *