• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 11, 2023

நற்றிணைப் பாடல் 269:

குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்,
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்;
அறிவார் யார், அவர் முன்னியவ்வே?

பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலை

பொருள் :
தென்னம்பூக் குரும்பை போன்ற மணிப்பூண் கிண்கிணியை அணிந்து கொண்டு பாலுண்ணும் செவ்வாயை உடைய என்மகன் தன் மார்பில் ஏறி விளையாடும்படி, மாலைகள் கட்டியுள்ள கட்டிலில் என் காதலி படுத்திருக்கிறாள். அவளது வாய்ச்சிரிப்பில் மாட்சிமை தோன்றுகிறது. அது அவளது குற்றமற்ற கோட்பாட்டின் வெளிப்பாடு. அவள் நம் உயிரைக் காட்டிலும் விரும்பத்தக்க மேம்பாடு உடையவள். அவளது திருமுகத்தில் கண்கள் நாள்தோறும் சுழன்றுகொண்டிருக்கின்றன. (அவளை விட்டுவிட்டு நீ பிரிந்து சென்றுவிடுவாயோ என்று எண்ணி மருண்டு சுழன்றுகொண்டிருக்கின்றன) பெருமானே! கொடிபோல் படர்ந்து அவள் உன்னைப் பற்றிக்கொண்டிருக்கிறாளே என்று எண்ணாமல், பல குன்றங்களைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வாயாயின், அச் செயலின் நிலைமையையும், அவர் நினைக்கும் பொருளின் முடிவையும் இன்று அறிபவர் யார்?
எதுவும் நேரலாம் அல்லவா? தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.