நற்றிணைப் பாடல் 252:
‘உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்’ என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் – புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே!
பாடியவர்: அம்மெய்யன் நாகனார்
திணை: பாலை
பொருள்:
சுவரில் அலங்கரித்து எழுதிய பிரதிமை போன்ற குற்றந்தீர்ந்த காட்சியையும் மெல்லியதாய்ப் பொருந்தியகன்ற அல்குலையும்; மையெழுதப்பட்டு நீலமலரை எதிரிட்டுப் பிணைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ச்சியுற்ற கண்ணையும்; முயலைப் பிடிக்க வெழுந்த விரைந்த செலவும் சினமுமுடைய நாயினது நல்ல நாவினை யொத்த சிறிய அடிகளையும்; செறிந்த கூந்தலையும் புனைந்த கலன்களையுமுடைய இவளுடைய குணங்கள்; கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டகிளைகளுள் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலியாநிற்கும் வேற்றுநாட்டின்கண்ணே; செல்லுகின்ற நெறியில் இன்னவாறு செல்வோமென்னுங் கோட்பாட்டினோடு சென்றிருந்து பொருள் சேர்த்தாலல்லாமல்; வீட்டின்கண் கவலையுடன் மனமடிந்து இருந்தவர்க்கு அரிய பொருளின் சேர்க்கை ஒருபொழுதும் சேர்வதில்லை யென்று; இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால்; தலைவர் ஆராய்ந்து தொடங்கிய காரியத்தின்கண்ணே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்தில போலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பால தன்றி வேறு செய்யக்கடவது யாதுமில்லை.