• Thu. Mar 27th, 2025

நற்றிணைப் பாடல் 247:

Byவிஷா

Sep 11, 2023

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

பாடியவர்: பரணர்
திணை: குறிஞ்சி

பொருள்:

பொருள் தேடச் செல்லவிருக்கும் தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

நீ மலைநாடன். யானை தன் பழமையான வலிமையுடன் சினம் கொண்டு தன்னை எதிர்த்த புலியைக் கொன்று குருதி படிந்த கொம்புடன் நிற்கும். பெருமழை பொழியும்போது அந்தக் கறையைக் கழுவிக்கொள்ளும். அப்படி மழை பொழிந்த மேகம். இரும்பு மணையால் தூய்மை செய்த பஞ்சு போல் விடியற்காலப் பொழுதில் மஞ்சுமேகத்துடன் தோன்றும். இப்படித் தோன்றும் மலைநாடன் நீ. நீ இவளுக்கு அளி (உறவுக்கொடை) செய்யவில்லை என்றாலும், இவளுக்கு நன்மை இல்லாதன செய்வாய் ஆயினும், உன்னைத் தொழுதுகொண்டிருக்கும் என் தோழியின் நெற்றியில் புதிதாக இருப்புக் கொண்டிருக்கும் பசலை நோய்க்கு உன் உறவுகொடையைத் தவிர வேறு மருந்து இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு செல்வாயாக.