• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Aug 18, 2023

நற்றிணைப் பாடல் 233:
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலை மன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி தோழி! முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே.

பாடியவர்: அஞ்சில் ஆந்தையார்
திணை: குறிஞ்சி

பொருள்:
தன் தொழிலை அன்றி வேறொன்றையும் கல்லாத ஆண்குரங்கு நடுங்கும்படி
முள்ளைப் போன்ற பற்களும், மடமைத் தன்மையும் பெரிய உருவமும் கொண்ட பெண்குரங்கு தன் குட்டியுடன் முகடுகள் உயர்ந்த மலையக்கத்தில் தவழும் மழைமேக மூட்டத்தில் ஒளிந்துகொள்ளும் பெருமலை நாட்டை உடையவனுக்கே அருள் வழங்கியவள் நீ. இனி நீ நான் சொல்வதைக் கேட்கமாட்டாய். என்றாலும் வீணாக ஒன்றை உனக்குக் கூறிவைக்கிறேன்.
தோழி! இதனைக் கேள். அவன்மீது முன்பே அன்பு கொண்ட நெஞ்சத்தில் ஆர்வத்தைப் பொதித்து வைத்துள்ளாய். அவன் ஆன்றோர் செல்லும் வழியிலிருந்து வழுவாமல் நடந்துகொள்ளும் சான்றோனாகத் திகழவேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தெளிந்துகொண்டு அவனோடு பழகுவாயாக.