நற்றிணைப் பாடல் 227:
அறிந்தோர் ”அறன் இலர்” என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது ஐய! நின் அருளே.
பாடியவர்: தேவனார்
திணை: நெய்தல்
பொருள்:
தோழி தலைவனிடம் சொல்கிறாள். நன்கு தெரிந்தவரை “அறம் இல்லாதவர்” என்று சொல்வதானது உயிர் போவதை விடக் கொடியது. கடற்கரைப் புன்னை மரத் தோப்பில் உன்னோடு புணரும் குறியிடம் மின்னும் ஈரக் கூந்தலை உடைய என் தலைவிக்கு வாய்த்தது. அம்மம்ம! ஐய! நீ அவளுக்கு வழங்கிய அருள் தெருவெல்லாம் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. மணியொலியுடன் சோழர் யானைமேல் செல்வர். அவர்களின் தலைநகரம் ஆர்க்காடு. அங்கு வெற்றிக்கொடி பறக்கும் தேரோடும் தெருவில் பூவின் கள் மணக்கும் சோலையில் பறவைகள் ஒலிப்பது போல உங்கள் காதல் உறவு கௌவையாகப் பேசப்படுகிறது.