• Mon. Apr 29th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 2, 2023

நற்றிணைப் பாடல் 220:

சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர்மன்ற – விசிபிணி முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
‘ஊரேம்’ என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ‘தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்’ என்று எம்மொடு படலே!

பாடியவர்: குண்டுகட்பாலியாதனார்.
திணை: குறிஞ்சி

பொருள்:

பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் “தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்” என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *