

நற்றிணைப் பாடல் 219:
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி தோழி! சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே.
பாடியவர் : தாயங்கண்ணனார்
திணை: நெய்தல்
பொருள்:
தோழி! கேள். அவர் பிரிவால் என் கண்ணும், தோளும், குளுமையுடன் மணக்கும் கூந்தலும் பழய நலத்தை இழந்து, உடலில் பசலை பாய்ந்து, உயிரே போவதாக இருந்தாலும், அவர்மீது நான் புலவிச்சினம் கொள்ளமாட்டேன். சிறிய காலை உடைய நண்டை இழுத்துக்கொண்டு புலால் நாற்றத்துடன் பாயும் அலைகள் மோதும் கடலில் பெரிய மீன்களைப் பிடிக்கச் செல்லும் பரதவர் தம் படகில் இரவு நேரத்தில் வைத்திருக்கும் விளக்குச் சுடரானது இளஞ்சூரியனின் ஒளி போல் தோற்றமளிக்கும் கடல்-கானலை உடையவன் என் சேர்ப்பன். தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
