• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 30, 2023

நற்றிணைப் பாடல் 219:

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி – தோழி! – சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே.

பாடியவர்: தாயங்கண்ணனார்
திணை: நெய்தல்

பொருள்:

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்.