• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 26, 2023

நற்றிணைப் பாடல் 215:

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்

நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய

கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

பாடியவர்: மதுரைச் சுள்ளம் போதனார்
திணை: நெய்தல்

பொருள்:

சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ? சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்;