• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 25, 2023

நற்றிணைப் பாடல் 214:

‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்’ என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு’ என,

எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ – தோழி! – தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி

நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?

பாடியவர்: கருவூர்க் கோசனார்
திணை: பாலை

பொருள்:

தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; என்னை நோக்கி “நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் சென்ற யாதொரு குற்றமும் இல்லாத நங்காதலர்; என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?