• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

May 6, 2024

நற்றிணைப்பாடல் 370:

வாராய், பாண! நகுகம் – நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,
‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?’ என,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,
முகை நாண் முறுவல் தோற்றி தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

பாடியவர்: உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் திணை: மருதம்

பொருள்:

பாணனே! என்னருகு வருவாயாக! நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்! நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்!