• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 273:

Byவிஷா

Oct 16, 2023

இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, ”வெறி” என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?

பாடியவர் : மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
திணை : குறிஞ்சி

பொருள் :
தோழி! இது ஏன் நடக்கிறது? அவன் என்னை மணந்துகொள்ளவில்லையே என்று நான் வருந்துகிறேன். என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் என் வருத்தத்தைக் கண்டு தான் துன்புற்று, வேலனை வினவ, அவன் “வெறி” என்று கூறுகிறான். இது ஏன் நடக்கிறது? கருவண்ணம் மிகுந்த தலைமை யானை நீர் நிறைந்திருக்கும் நீண்ட சுனையில் நீராடுகிறது. அப்போது நீரலை மோதி என் கண்ணைப் போல் இருக்கும் நீல மலர் தன் கண்ணைத் திறந்து மணக்கிறது. இப்படி மணக்கும் குன்றத்தைக் கொண்டவன் என் தலைவன். அவன் நடந்துகொள்ளும் பண்பை நினைக்கும்போது நெஞ்சே நடுங்குகிறது.