வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.
பாடலின் பின்னணி:
பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி கூறுகிறாள். தலைவன் தலைவியை அழைத்துச் செல்லாமல் தனியே செல்கிறான். அவன் செல்லும் வழியில் ஒருபாலை நிலத்தைக் கடக்க வேண்டியதாக உள்ளது. அந்தப் பாலை நிலத்தின் கொடுமையைக் கண்ட தலைவன், தலைவியைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தால் அவள் மிகவும் துன்பப்பட்டு இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.
பாடலின் பொருள்:
விலங்குகளை வேட்டையாடும் காட்டுநாய்கள் தோண்டிய குழிகளில் தோன்றிய நீரில் அந்த நாய்கள் குடித்ததுபோக எஞ்சிய சிறிதளவு நீரைக் காட்டுமல்லிகைப் பூக்கள் விழுந்து மூடியதால், அந்த நீர் அழுகிய நாற்றமுடையதாக உள்ளது. வளையலை அணிந்த, என் நெஞ்சில் அமர்ந்த, என் தலைவி என்னோடு வந்திருந்தால் அந்த நீரை என்னோடு சேர்ந்து உண்ண வேண்டியதாக இருந்திருக்கும். அவள் மிகவும் இரங்கத் தக்கவளாக இருந்திருப்பாள்.