• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 53

Byadmin

Apr 8, 2025

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
பாடலின் பின்னணி:
தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான். ஆனால், திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யவில்லை. தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால் தோழியும் தலைவியும் வருந்துகிறார்கள். தோழி தலைவனை நோக்கி, “ நீ கொடுத்த உறுதிமொழிகளை நீ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது எங்களை வருத்துகிறது. ஆகவே, நீ தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
மருதநிலத் தலைவனே! வேலன் (வெறியாட்டு நடத்துபவன்) அழகாக அமைத்த வெறியாட்டு நடைபெறும் இடத்தில் செந்நெல்லின் வெண்ணிறமான பொரியைச் சிதறியது போல, முற்றத்தில் அரும்புகளாக இருந்து முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் வெண்மையான மணல்மேடுகள் பொருந்திய எமது ஊரில் உள்ள பெரிய நீர்த்துறையில், தன் கைகளில் நல்ல வளையல்களை அணிந்த தலைவியின் முன்கையைப் பற்றி அச்சம் தரும் தெய்வமகளிர்முன் நீ கொடுத்த உறுதிமொழிகள் எம்மை வருத்துகின்றன.