காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.
பாடலின் பின்னணி:
தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே, ஒரு பாணனைத் தலைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான். தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குத் தூதுவன் வருகிறான். தலைவன் மீண்டும் வரவிரும்புகிறான் என்று தூதுவன் கூறியதைக் கேட்ட தலைவி, தலைவன் வருவதற்குச் சம்மதிக்கிறாள். தலைவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு தலைவன் வரவுக்குத் தலைவி உடன்பட்டதைக் கண்டு தோழி வியக்கிறாள்.
பாடலின் பொருள்:
காலையில் எழுந்து, விரைந்து செல்லும் குதிரைகளைத் தேரில் பூட்டி, மிகுந்த அணிகலன்களை அணிந்த பரத்தையரைத், தழுவும் பொருட்டு, வளமை பொருந்திய ஊரையுடைய தலைவன் சென்றான். அவன், மிகுந்த பெருமைக்குரியவன். அவன் மீண்டும் தன்னிடம் வந்தால் அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி மனம் கலக்கம் அடைகிறாள். தலைவியின் மனம் கலங்கக்கூடிய செயலைத் தலைவன் செய்தாலும் அதனை மறந்து அவனைத் தலைவி ஏற்றுக்கொள்வது துன்பத்திற்குரியதாயினும் அஃது இந்தக் குடியிற் பிறந்தவர் செய்யும் செயல் போலும்.