செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
பாடியவர்: ஒளவையார்.
பாடலின் பின்னணி:
”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் தலைவர் நினைத்தார். இப்பொழுது அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அதை நினைத்து நான் வருந்துகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார் என்று நான் மனஉறுதியுடன் இருந்ததால், அவருடைய பிரிவைப் பற்றிய எண்ணங்களை முற்றிலும் புறக்கணித்தேன். தான் பிரிந்து செல்லப்போவதை என்னிடம் தெரிவித்தால், நான் அதற்கு உடன்படமாட்டேன் என்று எண்ணித் தன் பிரிவைப்பற்றி என்னிடம் சொல்வதை அவர் புறக்கணித்தார். அப்பொழுது, எங்கள் இருவருடைய மனஉறுதியினால் தோன்றிய போராட்டத்தால் துன்பம் அடைந்த என் நெஞ்சம், இப்பொழுது நல்லபாம்பு கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது.