காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.
பாடியவர்: அணிலாடு முன்றிலார்.
பாடலின் பின்னணி:
தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். தோழி, “ நீ ஏன் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்கிறாள். தலைவி, “என் தலைவர் என்னோடு இருந்த பொழுது நான் மகிழ்ச்சியோடு இருந்தேன். இப்பொழுது அவர் என்னோடு இல்லாததால், நான் பொலிவிழந்து, தனிமையில் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, தலைவர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன், திருவிழா நடைபெறும் ஊரில் உள்ளவர்கள் மகிழ்வதைப் போல் நானும் மகிழ்ச்சியோடு இருப்பேன். அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், பாலைநிலத்தில் உள்ள, அழகிய வீடுகளுடன் கூடிய சிறிய ஊரிலிருந்து மக்கள் நீங்கிச் சென்ற பிறகு அணில் விளையாடும் முற்றத்தையுடைய தனிமையான வீட்டைப் போல் நானும் பொலிவிழந்து வருந்துவேன்.