• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 38

Byவிஷா

Mar 10, 2025

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி:
திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். தலைவியைக் காண்பதற்குத் தோழி வருகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “திருமணத்திற்குப் பொருள் திரட்டுவதற்காகத்தானே உன் தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் விரைவில் திரும்பி வருவார். பிரிவைப் பொறுத்துக்கொள் “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் மனவலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும். அது எனக்கு இல்லையே! “ என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே!