• Wed. Mar 19th, 2025

குறுந்தொகைப் பாடல் 37

Byவிஷா

Mar 5, 2025

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண்யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர், நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் சென்ற வழி, பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது.