அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் மீண்டும் தலைவியோடு கூடி வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், ஒரு இளைய பாணனைத் தன் தூதுவனாகத் தலைவியிடம் அனுப்புகிறான். அந்த இளைய பாணன் இசைத்தொழிலில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவன். ஆனால், சொல்வன்மை மிக்கவன். அவன் தலைவியிடம் சென்று, தலைவனைப் புகழ்ந்து பேசுகிறான். அவன் சொல்வன்மையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தலைவி, தலைவனை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறாள். தலைவன் வந்தவுடன் அவனுக்குப் பெரிய விருந்து அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றுகிறது. அந்த இளைய பாணனின் திறமையைக் கண்டு வியந்த தலைவி, “ இந்தத் திறமையுள்ள இளைய பாணனின் சொல்வன்மை என்னைக் கவர்ந்ததால் நான் என் தலைவனை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தேன். என் தலைவன் வந்தவுடன் நான் பெரிய விருந்தளிக்கப் போகிறேன். அந்த விருந்துக்கு இந்தப் பாணனையும் அழைக்கப் போகிறேன். வரும் எதிர்காலத்தில், இந்தப் பாணன் இப்படி எத்தனைபேருக்குத் தூது சென்று, எத்தனை விருந்துகளைப் பெறப்போகிறானோ? இவன் நிச்சயமாகப் பெருமைக்குரியவனாக விளங்குவான்.” என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழியே! தனது ஊர்ப் பொதுவிடத்தில் உள்ள இந்தப் பாணன் ஒரு இளைய மாணவன். ஆனால் எவ்வளவு திறமை உடையவனாக இருக்கிறான்! பலரிடத்தில் இரந்து உண்ணும் இவன், இன்னும் முற்றிலும் வளர்ச்சி அடையாத உடலோடு உள்ளான். இவன் திறமையால் பலராலும் பாராட்டப்பட்டு, பலருக்கும் விருந்தினனாகச் சென்று, பெருமையுடன் விளங்கப் போகிறான்.