நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.
பாடியவர்: சேரமானெந்தை
திணை: பாலை
பாடலின் பின்னணி:
தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை அழைத்துக் கொண்டுதான் செல்வார்” என்று தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
நீர் வடியும் கண்களையுடைய தோழி ( தலைவியே!)! உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு யாரால் பிரிந்து செல்ல முடியும்? கடம்ப மலரை உடைய கடம்ப மரங்கள், மலைப்பக்கத்திற்கு அழகு செய்கின்றன. வேனிற் காலத்தில் அந்த மலர்கள் மலர்வதால், அவற்றைத் தாங்கி நிற்கும் அழகிய கிளைகளும் மணம் உடையனவாக உள்ளன. அந்த மலர்களின் நறுமணம் போல் மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியை உடைய உன்னை உன் தலைவர் கூடவே அழைத்துச் செல்வார்.