• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jul 11, 2023

”தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப் பட்ட என் நெஞ்சு உணக் 5
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு” என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் 10
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

பாடியவர்: மள்ளனார்
திணை: குறிஞ்சி

பொருள்:
“தளிரோடு கூடிய தழையால் ஆடை தைத்து உனக்குத் தர, குளிர் வாட்டும் உன் தந்தையின் அகன்ற தினைப்புனத்துக்குப் பொழுது போகும் நேரத்தில் வரட்டுமா. அல்லது, சிறிய சுனையில் குவளைப் பூக்களால் மூடிக்கொண்டு நாம் சேர்ந்திருந்தோமே அந்த மலைச்சாரல் பகுதிக்கு விளையாட வரட்டுமா? உன்னை விரும்பும் என் நெஞ்சம் உண்ணுமாறு இனியாவது இனிய சொற்களைக் கூறு, மடந்தை!
உன் கூர்மையான பல்லின் ஊறலை நான் உண்ண வேண்டும்” என்று நான் அவளிடம் கூறினேன். அவளோ, தன் விருப்பத்தைச் செய்குறியால் இனிமையாகக் கூறிவிட்டு, ஆண்மானைப் பிரியும் பெணைமான் போன்ற மனநிலையுடன் மூங்கில் காட்டுக்குள் இருக்கும் அவளது ஊரை நோக்கி மெல்ல அடி வைத்து நடக்கலானாள். அந்தக் கொடிச்சி செல்லும் பின்னழகைப் பார்த்துக்கொண்டிருந்த என் நெஞ்சத்தைத் திரும்பி வாங்க முடியவில்லை.