

நற்றிணைப் பாடல் 204:
‘தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு’ என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?
பாடியவர்: மள்ளனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் “நீ பின்னர் என்னை முயங்குதி” என இனிய மொழிகளைக் கூறி; கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே!