மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
பாடலின் பின்னணி:
தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற அவளுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நோயுற்று ஒளி இழந்து காணப்படுகின்றன. தன் நிலையைத் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
தோழி, மேலே உள்ள தூசி முற்றிலும் நீங்கும்படிப் பாகனால் கழுவப்பட்ட யானையைப் போன்ற, பெரிய மழையால் கழுவபட்ட கரிய, சொரசொரப்பான பாறைக்கு அருகே பசுமையான ஓரிடத்தில் என்னோடு கூடியிருந்த குறிஞ்சி நிலத் தலைவன் இப்பொழுது எனக்குக் காமநோயைத் தந்தான். அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய அழகிய கண்கள் பசலை நோயுற்றன.








