குறுந்தொகைப் பாடல் 1:
செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழல்தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
பாடியவர் : திப்புத்தோளர்
திணை : குறிஞ்சி
பொருள்:
காதலன் தன் காதலிக்குப் பரிசாகத் தழையாலும் பூவாலும் செய்த தழையாடை ஒன்றைப் பரிசாக அவளது தோழியிடம் தருகிறான். தோழி இச்சொற்களைக் கூறி அதனை வாங்க மறுக்கிறாள்.
எங்கள் மலை சேயோனாகிய முருகன் குடிகொண்டுள்ள மலை. அதில் குருதி நிறத்தில் காந்தள் பூக்கள் மிகுதியாக உள்ளன. (நாங்களே அதனால் செய்த தழையாடை புனைந்துகொள்கிறோம் என்கிறாள்)
முருகன் – போர்க்களமே குருதி வெள்ளத்தில் சிவப்பாகும்படி அவுணர்களைக் கொன்றவன் முருகன். மத்தகத்தில் அம்புகள் செங்கோல்களாகத் தைத்து அதன் வெள்ளைக் கொம்பு செந்நிறக் கொம்பாக மாறியுள்ள யானைமீது இருந்து கொண்டு அவணர்களைத் தேய்த்தவன். காலில் வீரக் கழல் அணிந்தவன்.