தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.
பாடியவர் : ஆலங்குடி வங்கனார்
திணை : மருதம்
பொருள்:
வளைந்த கொம்பும் கட்டான கழுத்தும் கொண்ட எருமைக்கடா நீர் தேங்கிய கயத்தில் மேயும் கொக்குகள் பறந்தோடும்படித் ‘துடும்’ எனப் பாயும். நாளெல்லாம் உழவனுக்காக உழைத்த வருத்தமெல்லாம் போகும்படி நீரில் கிடக்கும். பின்னர் கரையேறி வந்து புன்னைமர நிழலில் படுத்திருக்கும். இப்படிப்பட்ட வளம் மிக்க ஊரின் தலைவனே! நீ அளித்த சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் உன் காதல் கன்னியரை எம் வீட்டுக்கே அழைத்துவந்து அவர்களோடு நீ கூடி வாழ்ந்தாலும், அவர்களின் அற்பமான மனத்தில் உண்மை இருக்காது. அவர்கள் ஆண், பெண் பிள்ளைகளை உனக்காகப் பெற்று, என்னைப் போல நன்றி சான்ற கற்புடையவர்கள் ஆதல் அதைக் காட்டிலும் அரிது. மனைவி கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.