புதுச்சேரியில் இருந்து ஊசுடு கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பள்ளி,கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் நடவடிக்கையால் கடந்த 2023-ம் ஆண்டு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று முறை போக்குவரத்து ஆணையருக்கு அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தனது தொகுதி மக்களுடன் போக்குவரத்து துறை அலுவலகம் வந்த அவர் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரனிடம் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பேருந்துகளை அதிகாரிகள் நிர்வாகம் செய்யும் நிலையில் புதுச்சேரியில் 140 பேருந்துகளை இயக்க முடியாதா என்று துணை ஆணையரிடம் கேள்வி எழுப்பிய அவர் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க போவதவும் எச்சரித்தார்.