• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

தற்கொலை செய்யும் மனநிலையில் இருக்கிறேன்: டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம்

பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும், எனவே பணியிட மாறுதல் அளிக்கவேண்டும் எனவும் டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம் எழுதியவிவகாரம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா(29). கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, 2019-ல் டிஎஸ்பி பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து முதல்முறையாக கடந்த ஆண்டு செப்.8-ம்தேதி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். தற்போது கடந்தஒரு மாதமாக சென்னையில் பயிற்சியில் உள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

சட்டம் ஒழுங்குப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்சினையும் உள்ளது. பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனநிலை உள்ளது. நான், எனது கணவர், பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாருடன் நல்ல குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறேன். இருந்தும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

எனவே, எனக்கு காவலர் பயிற்சி மையம் (பிஆர்எஸ்) அல்லது பட்டாலியன் போன்ற சென்சிட்டிவ் அல்லாத பிரிவில் பணியிடமாற்றல் வழங்கி என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துஉள்ளார். இதுகுறித்து டிஎஸ்பி சந்தியாவிடம் விவரம் கேட்க அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டும், அவர் பதிலளிக்கவில்லை.