அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட தலைவர் மதன் (எ)மதனகோபால் அவர்களின் இறந்து போன தந்தை ரத்தினசாமி (முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் )அவரது உருவ படத்தை நேற்று இரவு
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை திறந்துவைத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் மீண்டும் பழைய நிலையில் நடைமுறைப்படுத்த வேண்டும், சோனியா காந்தி கொண்டு வந்த, உலகம் போற்றுகின்ற இந்தத் திட்டத்தைச் சிதைக்கக் கூடாது என்று மோடி அரசைக் கண்டித்து மாபெரும் பாதயாத்திரை மேற்கொண்டோம். தமிழகத்தில் கூட்டணி குறித்தும், எத்தனை சீட் என்பது குறித்தும் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.
இந்தியாவில் இருக்கின்ற மத்திய அமைச்சர்கள் எல்லாரும் தமிழகத்திற்கு படையெடுக்கட்டும். பாஜக ஆளும் மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ எல்லாம் படையெடுக்கட்டும். தமிழ்நாட்டு மண் ஒருபோதும் பா.ஜ.க கூட்டணிக்கான மண் இல்லை. பா.ஜ.க-வை ஒருபோதும் தமிழ் மண்ணில் கால் ஊன்ற தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். திமுக தலைமையிலான கூட்டணி 45 விழுக்காட்டுக்கு மேல் ஓட்டு வங்கி உள்ளது. இது 50 விழுக்காடாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து துரோகம் செய்கின்ற பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருக்கின்ற அதிமுக எப்படி வெற்றி பெறும்? ஏற்கனவே இருந்த தமிழ்நாட்டின் உரிமைகள் – நீட், ஜிஎஸ்டி, உதயமின் திட்டம் – எல்லாவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, சொல்கின்ற இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுட்டு, இப்பவும் முகமூடி அணிந்து கொண்டு மோடி சொல்வதை கேட்பவர்களை எப்படி நம்புவோம்? முகமூடி அணிந்து செயல்படுபவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களை விரட்டியடிப்பார்கள். ஒருபோதும் அதிமுக , பாஜக ஓட்டு கேட்டுப் போகவே முடியாது.
காங்கிரஸ் ஒருபோதும் நீட் தேர்வை கொண்டு வரவில்லை அது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா அந்த ப்ரோபோசலை வைத்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை வாங்கி விட்டோம்.

ஆனால் மோடி அரசு வந்த பிறகுதான் ‘சங்கல்ப்’ என்ற ஒரு என்.ஜி.ஓ மூலமா மனுதாரரா போட்டு நடத்துவோம் என்று கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த பிறகு கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் – டை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ‘யூனிஃபார்ம் சிலபஸ்’ – ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இந்தியா முழுவதும் வரும்போது தான் நீட்- டை அனுமதிக்க முடியும் என்று சொன்னார். தற்போது இருக்கின்ற ஜேபி நட்டா பிஜேபி தலைவராக இருந்தவர் தான் அந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சொன்னார்கள் அனுமதிக்க மாட்டோம் என்று, பிறகு அனுமதித்தது யார்? முன்னாள் முதல்வர் பழனிசாமி தான் நீட்- டை அனுமதித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கின்ற வரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. நீட், ஜிஎஸ்டி, உதயமின் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்திலும் கையெழுத்து போடவில்லை. அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி தான் அனுமதி தந்தார். யாருக்காக? மோடி சொன்னதைக் கேட்டுக்கொண்டு அனுமதி வழங்கினார். எத்தனை குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டார்கள்? இதற்கெல்லாம் மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும்
பொறுப்பேற்பார்களா? உண்மையை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல மறைக்க பார்க்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது தேர்தல் பதில் சொல்லும் என்று கூறினார்.










