• Fri. Apr 26th, 2024

ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல் உணவு விலையும் உயரும்…

Byகாயத்ரி

Jul 20, 2022

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவுப் பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: “அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஹோட்டல் உணவுப் பொருட்களுக்கு மட்டும் தான் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹோட்டல் உணவுப் பண்டங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.அரிசியில் இருந்து தான் இட்லி, தோசை வகைகள், பொங்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவை உட்பட டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, அரிசிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹோட்டல் தொழில் மேலும் பாதிக்கப்படும். ஏற்கனவே ஹோட்டல்களில் விலை உயர்வால் வியாபாரம் குறைந்துள்ளது. கியாஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பு போன்றவற்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பது இத்தொழிலை மேலும் நசுக்குவதாக அமைந்து உள்ளது.


உயர்த்தப்பட்ட 5 சதவீத வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளின் விலை 5 சதவீதம் உயரும். அதாவது, 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும். தற்போது 2 இட்லி ரூ.30-க்கும், தோசை வகைகள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.இவற்றின் விலை மேலும் உயரும் போது பொதுமக்கள் ஹோட்டலுக்கு வரவே பயப்படுவார்கள். ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, நடத்த முடியாமல் பலர் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஹோட்டல் தொழில் மீது வரி விதிப்பதால் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல வடிவில் வரி விதிப்பது முறையா..?” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *