• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவையில் தொடரும் பயங்கரம்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு…

BySeenu

Aug 2, 2026

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்து 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, மீண்டும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து மிரட்டிய சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (தாளியூர் பேரூராட்சி ஊழியர்). இவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது சென்னை வீருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள்** இருப்பது இளம்பெண்ணுக்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துள்ளார்.

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காதல் முறிவைச் சகித்துக் கொள்ள முடியாத ரவுடி கார்த்திக், கடந்த மே 25-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் KTM மற்றும் பல்சர் பைக்குகளில் வந்து சுந்தரமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டார். கொலை மிரட்டல் விடுத்ததுடன், தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் குண்டுகளை (பீர் பாட்டில்கள்) வீட்டின் மீது சரமாரியாக வீசி எறிந்தனர்.

இதில் போர்டிகோவில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி (CCTV) காட்சிகளுடன் ரவுடிகளைத் தேடி வந்தனர்.

2 மாதங்கள் கழித்து மீண்டும் வெடிலாட்ட முயற்சி

இந்நிலையில், 2 மாதங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவித் திரிந்த ரவுடி கார்த்திக், நேற்று மாலை மீண்டும் தனது கொடூர புத்தியைக் காட்டியுள்ளார்.

கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து இறங்கிய இளம்பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டாளி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி கார்த்திக், பெண்ணின் வீட்டின் அருகிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு, இளம்பெண்ணை மிரட்டும் நோக்கில் பின் தொடர்ந்துள்ளார்.

பயந்துபோன இளம்பெண், அலறியடித்தபடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டார். பின்னர் அண்டை வீட்டாாரின் உதவியோடு பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளார். பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், ரவுடி கார்த்திக் தனது கூட்டாளியுடன் ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுள்ளார். இந்த திடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் கொந்தளிப்பு – காவல் துறையின் மெத்தனம்

31 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு ஆபத்தான ரவுடியை, தீவிரமாகத் தேடி வருகிறோம் எனக் கூறிக்கொண்டே 2 மாதங்களாகப் பிடிக்கத் தவறியது ஏன்? எனக் காவல் துறை மீது அப்பகுதி பொதுமக்கள் காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றவாளி மீண்டும் அதே வீட்டிற்கு வந்து பெண்ணைப் பின் தொடரும் அளவிற்குத் தைரியம் வந்துள்ளது என்றால், அப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.