• Thu. Apr 25th, 2024

நல்லாருப்போம் ….நல்லாருப்போம்…. எல்லாரும் நல்லாருப்போம் – நம்பிக்கையூட்டும் பழனியாண்டி!..

By

Aug 20, 2021

மதுரையில் போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர்தான் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி.

எல்லாரும் நல்லாருக்கணும். குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும். அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும். தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க. இதெல்லாம் ஒங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்.’ இதுபோன்ற அக்கறை மிகுந்த குரலை மதுரையின் பல்வேறு சந்திப்புகளில் கேட்காமல் கடக்க முடியாது. மதுரை மக்களின் பாராட்டைப் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டிதான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார். விவசாயம் சார்ந்த பாரம்பரியக் குடும்பம். காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து 29 ஆண்டுகளாகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை நகர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வருகிறார் பழனியாண்டி.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்தவர் அபிநயா இந்திய ஆட்சிப் பணிக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இளையவர் அஸ்வதா தற்போது பன்னிரெண்டாம் வகுப்பில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்று சட்டம் பயில ஆர்வம் கொண்டுள்ளார். பழனியாண்டியின் மனைவி கீதா மெழுகுவர்த்தி தொழில் மூலம் 10 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார். தங்களிடம் பணி செய்பவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை பெருமையுடன் பகிர்கிறார் பழனியாண்டி.

மதுரை மாநகரின் பல்வேறு சந்திப்புகளில் பழனியாண்டியின் குரலைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. ‘குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும். எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும். எதுக்காகவும் கவலைப்படக்கூடாது.’ என்று போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் உரத்துப் பேசுகிறார்.


‘என்னோட வீட்டுல ஒரு லட்சம் ரூபாய் மதிப்புல புத்தகங்கள் வச்சிருக்கேன். வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனா வாசிப்பு. வாசிப்பு.வாசிப்புதான். அதுல நான் கத்துக்கற நல்ல விசயங்கள பொதுமக்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன்.இந்தப் பணிய ரொம்ப ரசிச்சு நான் செய்யுறேன்.மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் சார் நான் வேலை செய்யுற இடத்துக்கே வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செஞ்சாரு. அத பெருமையா கருதுறேன்.’ என நெகிழ்கிறார், பழனியாண்டி.
நம்முடன் பேசிக் கொண்டிருக்கும்போதே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். மக்களை அறிவுறுத்தி, வாழ்வியல் பாடங்களை எடுக்கத் தொடங்குகிறார். காவலருக்குள்ளும் கசிந்துருகும் கனிவும், கண்ணியமும் நம்மை வியக்க வைக்கின்றன. ஒலிபெருக்கியில் என்ன சொல்கிறாரோ, அதையே நமக்கும் அறிவுரையாய் சொல்லி வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று நமக்கும் விடை கொடுக்கிறார். வாழ்க்கை வாழ்வதற்கே – கிடைக்கிற கொஞ்ச நேரத்திலயும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோசமாய் வாழுங்கள் என அசத்தல் பேச்சால் அசத்துகிறார், இந்த பாசக்கார மதுரை மைந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *