• Wed. May 1st, 2024

ஆழ்கடலில் சங்கு எடுக்க தடை விதித்த உயர்நீதிமன்றம்

Byவிஷா

Feb 29, 2024

தூத்துக்குடி ஆழ்கடலில் சங்க எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்கச் செயலாளர் ஜான்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. கடல்பரப்பு அமைந்துள்ளது. இதில், 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.
மேலும், வான்தீவு உள்ளிட்ட 21 தீவுகளைப் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்காவாகத் தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மீனவர்கள் பலர், ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுத்து வருகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அரிய கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், அழியும். எனவே, ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுக்கத் தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்கு எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுக்க மீன் வளத்துறை உரிமம் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *