• Sat. Apr 27th, 2024

கன மழையால் ஆந்திராவில் 17 பேர் பலி; 30 பேர் மாயம்

Byமதி

Nov 20, 2021

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை ஆந்திரா நோக்கி நேற்று நகர்ந்தது.

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த மழைக்கு ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *