விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. சிவகாசியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் பாய்ந்து சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரமாக காலையில் கடும் வெயிலும், மாலையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 10 மாவட்டங்களில் மே 16-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதன்பின் கனமழையாக மாறி இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக் கெடுத்து ஓடியது. அக்னி நட்சத்திர காலத்தில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி, திருத்தங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மிதமான மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்
