திருமங்கலம் தோப்பூர் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட மருத்துவ மனைகள் மற்றும் மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் பூட்டு போட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி மருத்துவமனை மற்றும் லேப் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் டாக்டர்கள் இன்றி செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் அந்தப் பகுதியில் செயல்பட்ட மற்றொரு மருத்துவமனை மற்றும் லேபில் வேறொரு டாக்டர்கள் பெயரில் அனுமதி இன்றி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அதில் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு பயின்றவர், தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாமல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் அந்த மருத்துவமனைகள், மெடிக்கல்களில் சோதனை நடத்தினர். உரிய அனுமதியை பெற்ற பின்னர் மருத்துவமனை, மெடிக்கல்களை நடத்துமாறு கூறி அதற்கு பூட்டு போட்ட அதிகாரிகள் சாவியை போலீசில் ஒப்படைத்தனர். மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் கூறுகையில், உரிய அனுமதி இன்றி செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை இல்லாமல் செவிலியர்களை வைத்து மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.