ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நெல்லை மாவட்டத்தில், பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கடையம் ஒன்றியத்தின் 12-வது வார்டில் தி.மு.க சார்பாக ஜெயகுமார் போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாகச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுவரும் மக்கள்நலத் திட்டப் பணிகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்துவருகிறார்.

அதே வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சந்திரசேகர் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சித் தலைவரான டி.டி.வி.தினகரன் படத்தை அச்சடிப்பதற்கு பதிலாக தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் படத்துடன் தனது குக்கர் சின்னத்தை அச்சிட்ட பிட்நோட்டீஸ்களை வாக்காளர்களுக்குக் கொடுத்து வாக்குச் சேகரிப்பதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவரின் செயலால் அதிருப்தியடைந்திருக்கும் தி.மு.க-வினர், இது தொடர்பாக கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், இது குறித்து தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்யவிருப்பதாகத் தெரிவித்தனர்.
இது பற்றி அ.ம.மு.க வேட்பாளரான சந்திரசேகரிடம் கேட்டதற்கு, “முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதுமுள்ள எல்லோருக்கும் முதல்வர். எனக்கும் அவர் முதல்வர் என்பதால் அவரது படத்தை அச்சடித்துள்ளேன். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடப்பதுபோல, இந்த வார்டில் என்னைத் தேர்வு செய்தால் நல்லது செய்வேன் என்பதை வெளிப்படுத்தவே அவரது படத்துடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நான் பிரசாரம் செய்கிறேன். எனது நோக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் என்மீது விமர்சனம் செய்கிறார்கள்” என்றார்.