• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ‘பருந்து செயலி’ விரைவில் அறிமுகம்

Byவிஷா

Jun 18, 2024

சென்னையில் ரவுடிகளைக் கண்காணிக்கும் வகையில், பருந்து செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குற்ற வழக்குகள், சிறை சென்ற விவரம் என ரவுடிகளை கண்காணிக்கும் ‘பருந்து செயலி’ சென்னை காவல் துறையில் உள்ளது. இந்த செயலி தமிழகம் முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கடந்த 2020-ல் 64, 2021-ல் 89, 2022-ல் 93 ஆதாயக் கொலைகள் நடைபெற்றுள்ளன.
இதுபோக இதே ஆண்டுகளில் தலா 1,597 கொலைகளும் நடைபெற்றுள்ளது. இதேபோல் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி உட்பட 26 வகையான குற்றங்கள் தொடர்பாக 2020-ல் 8 லட்சத்து 91,696, 2021-ல் 3 லட்சத்து 22,846, 2022-ல் 1 லட்சத்து 94,097 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளது.
குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவ்வப்போது ரவுடிகள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க ‘பருந்து’ என்ற செயலியை தமிழக காவல் துறை அறிமுகம் செய்தது. முதல் கட்டமாக சென்னை பெருநகர காவலில் இந்த செயலி கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா வடிவமைத்திருந்தார்.
காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இருப்பவர்கள், அவர்களின் தற்போதைய நிலை, அவர்களின் குற்றச் செயல்கள் விவரம், அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்கள், அவரது எதிர் தரப்பினர், கூட்டாளிகள், சிறையில் இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா, அவரது பகுதியிலேயே வசிக்கிறாரா? வேறு எங்கேனும் இடம் பெயர்ந்து விட்டாரா? உட்பட ரவுடிகளின் அனைத்து விபரங்களும் தினமும் கண்காணித்து பருந்து செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது சென்னை போலீஸாருக்கு பெரிதும் உதவி வருகிறது. இதையடுத்து இச் செயலியை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பருந்து செயலியில் ரவுடிகளின் நடவடிக்கைகள் தினமும் கண்காணிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். அதை உயர் அதிகாரிகள் கண்காணித்து அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதை அடிப்படையாக வைத்து காவல் ஆய்வாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த வாரம் சென்னை கொருக்குப்பேட்டையில் தினேஷ் என்ற ரவுடி எதிர் தரப்பு ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டதாக கொருக்குப்பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை தொடரும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.