• Thu. May 9th, 2024

நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர்..!

Byஜெ.துரை

Nov 20, 2023

லேபில் சீரிஸ் மூலம், அனைவரையும் தன் நடிப்பால் ஈர்த்த, நடிகர் ஹரிஷங்கர்
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக் கலக்கி வருகிறார்.

இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அண்டர் 19 பிரிவில் ஜீனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர், கிரிக்கெட் அனலைசராக ஐபிஎல்லில் மும்பை அணியில், பல போட்டிகளில் பணிபுரிந்துள்ளார்.

சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி முதலாக,பல போட்டிகளில் மும்பை அணிக்குச் சிறப்பான அனலைசராக பணியாற்றியுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக ஸ்போர்ட்ஸ் அனலைசராகவும் பணியாற்றியுள்ளார்.

ஸ்போர்ட்ஸில் கலக்கிய நிலையில், தன் கனவை நனவாக்கும் பொருட்டு, திரைத்துறையில் நடிகராக நுழைந்தார்.

தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமானவர், கலர்ஸ் தொலைக்காட்சியின் அம்மன், மாங்கல்ய சபதம் , விஜய் தொலைக்காட்சியின் காற்றுக்கென்ன வேலி தொடர்களில் நடித்தார். பின்னர் சினிமாவிற்காக தன்னை முழுதாக 2 வருடங்கள் தயார் செய்து கொண்டவர், மாயத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி, படங்களில் துணைக்காகப்பாத்திரங்களில் நடித்தார்.

லேபில் சீரிஸ் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது கதாப்பாத்திரம் தனித்துத் தெரிவதுடன், அவரது நடிப்பை, பலரும் பாராட்டி வருகிறார்கள்.

திரைத்துறை பிரபலங்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வரும் ஹரிசங்கருக்கு, பல புதிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இது குறித்து நடிகர் ஹரிஷங்கர் கூறியதாவது:

படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதில் கிடைத்த வாய்ப்புகளை முழுக்க பயன்படுத்திக் கொண்டேன்.

கிரிக்கெட் நம் எதிர்காலம் இல்லை, அனலிஸ்டாக எனக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை, என்று உணர்ந்த போது, உடனடியாக என் ஆர்வம் முழுவதையும் திரைத்துறை பக்கம் செலுத்தினேன்.

ஸ்போர்ட்ஸில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையிலிருந்து முழுதாக கிடைத்தது. தொலைக்காட்சியில் என் நடிப்பை ஆரம்பித்தாலும், சினிமா என் கனவாக இருந்தது.

லேபில் சீரிஸ் என் கனவை நனவாக்கியுள்ளது. கிரிக்கெட் மூலம் அறிமுகமான நண்பர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் என் ஆர்வத்தைப் பார்த்து லேபில் சீரிஸில் வாய்ப்புத் தந்தார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்குப் பிறகு, லேபில் சீரிஸ் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தயாரிப்பாளர் பிரபாகரன் அவர்கள் ஆரம்பம் முதலே எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார்.

இப்போது சீரிஸ் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் நான் நடித்த காட்சிகளை தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இப்போது பலரிடமிருந்து பாராட்டுகளோடு, வாய்ப்புகளும் வருகிறது. அடுத்ததாக நல்ல கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகராக பாராட்டுக்கள் பெற வேண்டும், வித்தியாசமான வில்லன் வேடங்களில் கலக்க வேண்டும், அதை நோக்கியே என் பயணம் இருக்கும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *