• Thu. May 9th, 2024

“அம்பு நாடு ஒம்பது குப்பம்” திரை விமர்சனம்…

Byஜெ.துரை

Nov 20, 2023

PK பிலிம்ஸ்-பூபதி கார்த்திகேயன் தயாரித்து ஜி.ராஜாஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அம்பு “அம்பு நாடு ஒம்பது குப்பம்” திரைப்படம். இத்திரைப்படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஷஷிதா,விக்ரம்,பிரபு மாணிக்கம்,மதன், ரமேஷ் மித்ரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உயர் சாதிப் பண்ணையார்கள் இருவர் கீழ் சாதிக்காரர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் உயர் சாதிப் பண்ணையாரின் தோட்டத்தில் பணி புரியும் கீழ் சாதியைச் சேர்ந்த சன்னாசியின் மகன் நன்றாகப் படிக்கிறான்.

படிப்பை முடித்து, நல்ல வேலைக்குப் போய் தன் குடும்பத்தை முன்னேற்ற நினைக்கிறான். அடிமைச் சிறையிலிருக்கும் தன் கிராமத்து மக்களின் நிலையிலும் மாற்றம் வரும் என நம்புகிறான்.

அப்படியான மனநிலையில் இருக்கும் அவன் ஒரு நாள் கோயிலின் கற்பூர ஆரத்தித் தட்டைத் தொட்டு விபூதி எடுத்துவிட, கீழ் சாதிக்காரன் பூஜைத் தட்டை தொட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத பூசாரி கோபப்பட்டு அவனைத் தாக்குகிறார்.

அத்தோடு விடவில்லை. அவனுக்கு அதைவிட பெரிய அவமானத்தை, தண்டனையைத் தர பண்ணையார்களும் அவரது அடியாட்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதே படத்தின் கதை.

சாதி வன் கொடுமைகள் மிக சாதாரணமாக நடந்துக் கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜி.ராஜாஜி, படத்தில் நடித்துள்ள அத்தனைப் புதுமுகங்களும் கதைக் களத்துக்கு மிகச் சரியாய் பொருந்தி இருப்பது படத்துக்கு பலம்.

சங்ககிரி மாணிக்கம் (சன்னாசி) என்ற கதாபாத்திரத்தில் வருகிற பெரியவரின் நடிப்பு நம்மை கண் கலங்க வைத்துள்ளது. அம்மாவாக நடித்திருக்கும் ஷர்ஷிதா, நடிக்க முயற்சித்துள்ளார்.

பண்ணையார்களின் அராஜகம், அடிமை மக்களின் துயரம் என மன இறுக்கம் தரும் காட்சிகள் வரும் போது கூட பக்கத்தில் என்ன நடந்தாலும் எது நடந்தாலும் கவலைப் படாமல் டிக்டாக்கில் வீடியோ போட எடுக்கும் குண்டு இளைஞர் நம்மை சிரிக்க வைக்கிறார்.

அந்தோணி தாசன் இசையும் பாடலின் காட்சியும் உற்சாகத்தை தருகிறது. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை அருமை. மொத்தத்தில் சக மனிதனை அடக்கி ஆள நினைக்கும் அதிகார வர்க்கத்தினரை “அம்பு நாடு ஒம்பது குப்பம்” வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *