• Thu. Apr 25th, 2024

ஆனைமலையில் கோலாகலமாக நடைபெற்ற குண்டம் திருவிழா!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன்,  புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக 
குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர். 

குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார்,  போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி)  கொடி இறக்குதல்,  மஞ்சள் நீராடல்,  மகா முனி பூஜை  ஆகிய  நிகழ்ச்சிகள்  நடைபெறும். நாளை மறுநாள்  (19ம் தேதி)  மகா அபிஷேகம்,  அலங்கார  பூஜைகளுடன்  குண்டம் விழா  நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *