லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உற்சாக வரவேற்பு அளித்தார்.
தமிழ் திரையுலகில் இசைஞானி எனப்போற்றப்படும் இளையராஜா தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகளை ஒன்றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அதன் தொடக்கமாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார்.
இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறிவித்தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றம் செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்து கொண்டு இளையராஜா சென்னைக்கு இன்று திரும்பினார். அவருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். மேலும் திமுக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இளையராஜாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இளையராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், மலர்ந்த முகத்தோடு என்னை வழியனுப்பி வைத்ததற்கு மகிழ்ச்சி. என்னுடைய இசை குறிப்புகளைச் சரியாக இசைக் கலைஞர்கள் வாசித்தார்கள். சிம்பொனியை அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்தனர். சிம்பொனி இசையை கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சி. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த விஷயமாக சிம்பொனி மாறியது. தமிழக மக்கள் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.