• Sat. Oct 12th, 2024

பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு குணமடைந்த சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

Byமதி

Dec 3, 2021

பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தென்காசி சிறுமியின் குடும்பத்தினருக்கு, தொடர் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரை சேர்ந்த சீதாராஜ் – பிரேமா தம்பதியரின் 5 வயது மகள் இசக்கியம்மாள். இவர் பிளீச்சிங் பவுடரை தெரியாமல் சாப்பிட்டதால், உடல் மெலிந்து மிகுந்த பாதிப்புக்குள்ளானார்.

இது குறித்து கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ் கண்ணன் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரச்செய்து பரிசோதித்து சிகிச்சையை தொடங்கினார்.

சிறுமியின் நிலையை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின்பேரில் குழந்தை இசக்கியம்மாளுக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட துவங்கியது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாய், தற்போது சிறுமி முழுமையாக குணமடைந்தார்.

குழந்தை பூரண குணமடைந்ததை அடுத்து, குழந்தையை இன்று நேரில் சந்தித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இச்சந்திப்பின்போது, குழந்தையின் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

சந்திப்பின்போது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வருடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *