வெள்ளத் தொடர்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பது தொடர்பான பயிற்சிக்காக தமிழகத்தில் 4 அரசு அதிகாரிகள் ஜப்பான் சென்றுள்ளனர்.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இருப்பினும், பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள நகர்ப்புற ஆற்றுப் படுகைகளில் வெள்ளத் தடுப்புக்காக மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழக அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்கெனவே ஒரு கட்ட பயிற்சி முடிந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட பயிற்சி இன்று(மே 11) முதல் 18-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக நீர்வளத் துறை சென்னை வடிநில செயற்பொறியாளர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் செயற்பொறியாளர் ஆர்.அருண்மொழி, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மழைநீர் வடிகால் கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர்.
