மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மலிவு விலை மருந்து கடையை திறந்து வைத்தார். இதனை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அணியில் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,
கூட்டுறவு துறை மூலமாக மிகக் குறைந்த விலையில் கிராமம் முழுவதும் மருந்து மாத்திரைகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கடந்த 2010ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்களால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இது மிகச் சிறந்த திட்டம் , இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் ஆண்டுக்கு 60 கடைகள் வீதம் 300 கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் 70 கூட்டுறவு மருந்துக்கடைகளை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் மிக மிகக் குறைந்த விலையில் மருந்துகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார்.