தீபாவளி சீசன் நெருங்குவதை முன்னிட்டு வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினம் தோறும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து கள்ளத்தனமாக பட்டாசுகள் தயாரிப்பது நடை பெற்று வருகின்றன.
வெம்பக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் கடத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் விஜயகரிசல்குளம் பஸ்நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தென்காசி மாவட்டம் மைப்பாறையிலிருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு சென்று கொண்டு இருந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வேனில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் அடங்கிய பதினைந்து பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
உடனடியாக ஐந்து லட்சம் மதிப்பிலான வெடிகளை பறிமுதல் செய்ததுடன் வேனையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேனில் வந்த சிவகாசி ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்த சரவண பாண்டி (வயது 26 ),விருதுநகர் அருகிலுள்ள மத்திய சேனையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25 ) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.