கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் தங்க விக்ரஹம், கேரள தொழில் அதிபர் ரவி பிள்ளை காணிக்கையாக வழங்கினார். அதனை அறக்கட்டளைகள் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பக்தியுடன் பெற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் 7 கிலோ தங்கத்திலான விக்ரகத்தை பக்தர் அன்பளிப்பாக வழங்கினார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
பல்வேறு வெளிநாட்டு பக்தர்கள் இங்கு வரும்போது அவர்கள் வேண்டுகிற விருப்பம் நிறைவேறுவதற்காக நேர்ச்சை செய்வது வழக்கம். அதன்படி கேரளா கொல்லத்தைச் சேர்ந்த ரவிப்பிள்ளை என்பவர் தமது விருப்பம் நிறைவேறுவதற்காக நேர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் நினைத்த காரியம் நிறைவேறியதால் 6.8 கிலோ எடையுள்ள தங்கத்திலான பகவதி அம்மனின் விக்ரகத்தை செய்து கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 6 கோடி ரூபாயாகும்.


இதற்கான நிகழ்ச்சி இன்று (பெப்ரவரி_3)ம் தேதி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதற்காக குடும்பத்துடன் வந்திருந்த ரவி பிள்ளை தங்க விக்ரஹத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
அப்போது அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணி, உறுப்பினர்கள் ஜோதீஸ்வரன், துளசிதரன் நாயர், சுந்தரி , தொகுதி கண்காணிப்பாளர் மற்றும் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் விக்ரஹம் அம்மன் மூலஸ்தானன் கருவறை வாசலில் வைத்து மேல்சாந்திகள் பத்மநாபன் போற்றி, ஶ்ரீனிவாசன் போற்றி, விட்டல் போற்றி, நிதின் சங்கர் ஆகியோர் முறைப்படி கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு வரப்பட்டு நகை சரி பார்ப்பு அதிகாரி செந்தில் குமார், தொழில் நுட்ப உதவியாளர் ராஜா ஆகியோர் நகையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர்.
சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடமும் பக்தர் வேலுப்பிள்ளை காணிக்கையாக வழங்கினார். இந்த விக்ரஹத்தை கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் கைலாஷ் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.
