• Fri. Mar 29th, 2024

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு – முதலமைச்சர் விளக்கம்

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும். 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். ஆனால், உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். எனவே கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெண்களுக்கு கல்விதான் நிரந்திர சொத்து, அதன் காரணமாகவே தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்திர சொத்து வேண்டும். பெண்ணுரிமை என்ற அடிப்படையில் தான் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் என்று விளக்கமளித்தார்.

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மாநில கணக்காய்வில் தெரியவந்துள்ளது. திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்குமேல் கூறி திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *