• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

BySeenu

Jan 28, 2024

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் நீலாம்பூர் மேம்பாலத்திற்கு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்ட வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ரூபாய் 50,000/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 7.680 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.